×

சிவகங்கை அருகே மாசி களரியை முன்னிட்டு ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 22 பேர் காயம்

சிவகங்கை: சிவகங்கை அருகே செம்பனூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகள் முட்டியதில் 22 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். சிவகங்கை அருகே செம்பனூரில் மாசி களரியை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. காலை 8 மணிக்கு அரசு வழிகாட்டுதல்படி மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினர் ஆகியோர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகி தங்கராஜ் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.

முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 850 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 300 மாடுபிடி வீரர்கள் சுற்றுவாரியாக களமிறக்கப்பட்டனர். பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் களத்தில் நின்று விளையாடின. போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு டூவீலர், கட்டில், பீரோ, டேபிள், எவர்சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 22 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவகுழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டையொட்டி 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

1 ஏக்கர் நிலம் பரிசு: டிரான்ஸ்பார்மர் என்ற காளையையும், திண்டுக்கல் சின்னபுகழ் என்ற காளையை அடக்குபவர்களுக்கு 1 ஏக்கர் நிலம் தருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு காளைகளையும் மாடுபிடி வீரர்களால் அடக்க முடியவில்லை.

 

The post சிவகங்கை அருகே மாசி களரியை முன்னிட்டு ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 22 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Jallikatu ,Masi Kalari ,Sivaganga ,Chempanur ,Stallion ,Sivakanga ,Dinakaran ,
× RELATED திருமயம் அருகே கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு